ராஜஸ்தான் சச்சரவுக்கு முற்றுப்புள்ளி – ராகுலை சந்தித்தார் சச்சின் பைலட்!

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் செயல்பட்ட சச்சின் பைலட் இன்று திடீர் திருப்பமாக டில்லியில் உள்ள ராகுலின் இல்லத்தில் அவரை சந்தித்து 2 மணி நேரம் பேசியுள்ளார். அப்போது பிரியங்காவும் உடனிருந்தார்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸின் மாநில தலைவராக சச்சின் பைலட் இருந்தார். துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தார். 2018 தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்க சச்சின் பைலட்டின் உழைப்பும் முக்கியமானதாக கருதப்பட்டது.
அவருக்கு முதலமைச்சர் பதவி அளிக்கப்படும் என மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், மூத்த தலைவரான அசோக் கெலாட் முதல்வரானார். தன் மகனை சேர்த்துக் கொண்டு சச்சின் பைலட்டை ஆட்சியிலும், கட்சியிலும் ஓரங்கட்ட தொடங்கினார். 2019 எம்.பி., தேர்தலில் தன்னுடைய மகன் தோற்றதற்கு காரணம் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் தான் என வெளிப்படையாக குற்றம்ச்சாட்டினார்.

இந்த நிலையில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் சமீபத்தில் வெளியேறினார் சச்சின் பைலட். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்த சூழலை பா.ஜ.க தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியது. அதற்கேற்ப அம்மாநில கவர்னரும் நடந்து கொண்டார்.
2 வாரங்களுக்கு முன் பிரியங்கா காந்தி, சச்சின் பைலட்டை டில்லி என்.சி.ஆர் பகுதியில் ஒரு பொதுவான இடத்தில் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அசோக் கெலாட்டை நீக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளார். அப்பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி இல்லத்தில் அவரை சந்தித்து 2 மணி நேரம் பேசியுள்ளார் சச்சின். ஆகஸ்ட் 14-ம் தேதி சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட கட்சித் தலைவர் மற்றும் துணை முதல்வர் பதவியை கேட்கிறார் சச்சின்.