“உங்கள் எழுச்சியூட்டும் பங்களிப்பை தேசத்தால் மறக்கவே முடியாது” ரெய்னாவை பாராட்டிய பிரதமர்!

தோனியும், ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று, சுதந்திர தினத்தில் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தனர். இருவருக்கும் கிரிக்கெட் உலகம் அல்லாமல் பலதரப்பட்ட துறைகளிலிருந்தும் பிரியாவிடை வாழ்த்துக்கள் குவிந்தன. இதில் தோனியாவது 39 வயதில் ஓய்வு அறிவித்தார், ஆனால் ரெய்னா 33 வயதில் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சிதான். இந்நிலையில் தோனியை பாராட்டி கடிதம் எழுதிய பிரதமர் மோடி, அவரை ‘புதிய இந்தியாவின் உத்வேகத்திற்கான எடுத்துக்காட்டு’ என்று பாராட்டினார்.
அதே போல் ரெய்னாவுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியிருக்கிறார், அதில் “ரெய்னா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, ஒரு பயனுள்ள பந்து வீச்சாளராகவும் நினைவுகூரப்படுவார். மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2011 உலகக் கோப்பையை உயர்த்திய அணியின் ஒரு பகுதியாக நீங்கள் இருந்தீர்கள். அந்த போட்டியில் உங்கள் எழுச்சியூட்டும் பங்களிப்பை தேசத்தால் ஒருபோதும் மறக்க முடியாது.
கிரிக்கெட் விளையாட்டுக்காவே வாழ்ந்தீர்கள், அதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் கடினமான முடிவை எடுத்துள்ளீர்கள்,அதை நான் ஓய்வு என்று சொல்லமாட்டேன். இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவை முன்னணிப்படுத்த முயன்றதற்கும் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறி நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மோடியின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்து ரெய்னா தன் ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் ஆடும்போது நாட்டுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துகிறோம். இந்த நாட்டு மக்களின் அன்பு போல் சிறந்த பாராட்டு வேறொன்றும் இல்லை. அதிலும் பிரதமரே அன்பு காட்டும்போது வேறேன்ன வேண்டும். உங்கள் பாராட்டை நன்றியுடன் ஏற்று கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!” என்று முடித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியின் எதிர்வரும் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மற்றும் ரெய்னா இருவரும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.