“டெலிவரி ஊழியர்கள் நன்னடத்தை சான்று பெறுதல் அவசியம்!” காவல் ஆணையர் உத்தரவு!!

சென்னையில் டெலிவரி ஊழியர்களாக வேண்டுமானால் நன்னடத்தை சான்று அவசியம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு புல்லட் ரக இரு சக்கர வாகனங்களைக் குறிவைத்து திருடி விற்ற ஒரு கும்பலை சென்னை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இந்தக் கும்பலை சேர்ந்த ஏழு பேரைக் கைது செய்தனர். இவர்கள் தங்கம் கடத்தும் குருவிகளாக செயல்பட்டு வந்ததும், பகலில் உணவு டெலிவரி நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே பைக் மற்றும் செயின் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக என்ஃபீல்டு ரக புல்லட்களைத் திருடி விற்று வந்த கும்பல் திருட்டு செயல்களுக்காக இரவு நேரங்களில் ஸ்விக்கி, ஜொமேட்டோ மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவு டெலிவரி நிறுவனங்களின் சீருடைகளை பயன்படுத்தி காவலர்கள் கண்ணில் படாமல் தப்பித்து வந்துள்ளனர். இதே போல் போதைப் பொருள் கடத்தல், வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களிலும் ஆன்லைன் டெலிவரி நிறுவன உடை அணிந்தவர்கள் ஈடுபட்டது காவல் துறையினரின் கவனத்துக்கு வந்துள்ளது.
எனவே இந்த மோசடி நடக்க இடம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சென்னை நகர காவல்துறை, ஆன்லைன் வர்த்தக மற்றும் உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்காக புதிதாக ஆட்களை பணியில் சேர்க்கும் முன் காவல்துறையிடம் இருந்து நன்னடத்தை சான்றிதழ் பெறுவது அவசியம் என்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு புதிதாக வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் குற்றப் பின்னணி பற்றி ஆய்வு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழக காவல்துறையின் CCTNS இன்று இணையதளத்தில் பதிவு செய்தும் எளிதாக நன்னடத்தை சான்றிதழை பெறலாம் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.