ஆர்டிஐ மூலம் தகவல் பெற புதிய விதிமுறைகள்…!

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் பெறுவதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் நோக்கத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஹரி கிஷன் என்பவர் குடியரசு தலைவர் மாளிகையில் பணி நியமனம் தொடர்பாக ஆர்டிஐ மூலம் தகவல் கோரியுள்ளார். இதில் தமது விவரங்கள் குறித்து குறிப்பிடாததால் மத்திய தகவல் ஆணையம் இவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணையில் தான் இப்படியான உத்தரவு வெளியாகியுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையில் விண்ணப்பதாரரின் மகள் குடியரசு தலைவர் மாளிகையில் பணி வாய்ப்பிற்காக விண்ணப்பித்துள்ளார். அவரது மகள் பணி வாய்ப்பு பெற முடியாததால் தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மற்ற விண்ணப்பதாரர்களின் விவரங்களை பெற விண்ணப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே விண்ணப்பதாரர் உள் நோக்கத்துடன் தகவல் ஆணையத்தை அணுகி இருப்பது தெளிவாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டு மத்திய தகவல் ஆணையத்தின் நடவடிக்கை சரியானது என்று தான் தீர்ப்பளித்துள்ளார். மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இனி தகவல் பெற நினைப்பவர்கள் தங்களது விவரங்களைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.