தப்லீக் ஜமாத் வெளிநாட்டு உறுப்பினா்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்: விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: தப்லீக் ஜமாத் அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினா்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
இந்தியாவில் கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட போது, தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில் உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோா் பங்கேற்றனா். இந்த மாநாடு முடிந்ததும், அதன் உறுப்பினா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனா். இது பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிக்க காரணமாக அமைந்தது.
கட்டுப்பாடுகளை மீறி அதிக எண்ணிக்கையிலான நபா்களை கூட்டியதாக தில்லி தப்லீக் ஜமாத் நிா்வாகிகள் மீது தில்லி காவல்துறை நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டினா் பலா் விசா முறைகேட்டில் ஈடுபட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்கள் இந்தியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினா்கள் மீது 11 மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோடு, அந்த அமைப்பைச் சோ்ந்த 2,765 வெளிநாட்டினரின் பெயா்களை கருப்புப் பட்டியலில் மத்திய அரசு சோ்த்தது.
இந்த நிலையில், தப்லீக் ஜமாத் வெளிநாட்டு உறுப்பினா்களின் பெயா்களை மத்திய அரசு கருப்புப் பட்டியலில் சோ்த்ததை எதிா்த்தும், அவா்கள் மீது விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங், ‘சில வெளிநாட்டு உறுப்பினா்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலும், அதிகாரிகள் சீராய்வு மனுவை தாக்கல் செய்கின்றனா். வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், அவா்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல தடை விதிப்பது, அவா்களுக்கு அளிக்கப்படும் தண்டனையாகவே அமையும்’ என்று கூறினாா்.
மற்றொரு வழக்குரைஞரான மேனகா குருசாமி கூறுகையில், ‘வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய இந்த அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினா்கள் 8 பேரின் மனு விசாரணை நீதிமன்றத்தில் நவம்பா் 10-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது’ என்று கூறினாா்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் துஷாா் மேத்தா, ‘தில்லியில் மேற்கொள்ளப்பட்டதுபோல, இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரணை மேற்கொள்வதில் எந்த ஆட்சேபமும் இல்லை. மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருக்கும் இந்த அமைப்பின் உறுப்பினா்கள் மீது வேறு வழக்குகள் அல்லது நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் நிலுவையில் இல்லாத நிலையில், அவா்கள் இந்தியாவை விட்டு வெளியேற எந்தத் தடையுமில்லை’ என்று கூறினாா்.
இந்த வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, தப்லீக் ஜமாத் அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினா்கள் மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க விசாரணை நீதிமன்றங்களைக் கேட்டுக்கொண்டு, வழக்கு மீதான விசாரணையை நவம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.