பிரகாஷ் ஜவடேகர் அளித்த புகார் – கிரெட்டா இயக்கம் மீது பாய்ந்த உபா சட் டம்!

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை 2020-க்கு எதிராக ஸ்வீடன் சிறுமி கிரெட்டா தன்பெர்க்கின் ‘பிரைடேஸ் பார் பியூட்சர் – இந்தியா’ அமைப்பு பிரசாரம் செய்து வந்தது. இந்நிலையில் டில்லி சைபர் பிரிவு இந்த அமைப்பு தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக உபா சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பி பின்னர் திரும்பப்பெற்றுள்ளது.
50 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகள் கொண்ட பெருந்திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை கட்டாயமாகும். இதில் திருத்தம் செய்து புதிய வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அந்த திருத்தம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதிகளை நீர்த்துப் போக செய்யும் வகையில் இருப்பதாக விமர்சனம் எழுந்தது. கிரெட்டா தன்பெர்க்கின் இந்திய அமைப்பும் புதிய வரைவுக்கு எதிராக பிரசாரம் செய்து வந்தது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொடர்ச்சியாக இஐஏ2020-க்கு எதிரான மின்னஞ்சல்களை இந்த அமைப்பு அனுப்பியுள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில் டில்லி சைபர் போலீசார் பிரைடேஸ் பார் பியூட்சர் அமைப்பிற்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இணையதளத்தையும் முடக்கியுள்ளனர்.
பின்னர் இவ்விவகாரம் சர்ச்சையானதும், தவறுதலாக உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துவிட்டதாகவும், பின்னர் அந்த நோட்டீஸை திரும்ப பெற்றுவிட்டதாகவும் டில்லி சைபர் போலீஸ் விளக்கமளித்துள்ளது. இருப்பினும் ஐ.டி., சட்ட பிரிவு 66-ன் கீழ் புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மத்திய அரசின் இந்நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக பிரைடேஸ் பார் பியூச்சர் அமைப்பு கூறியுள்ளது.