பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தேசதுரோகிகள் – பா.ஜ., எம்.பி., சர்ச்சை பேச்சு!

கர்நாடக பா.ஜ., எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே பி.எஸ்.என்.எல்., ஊழியர்களை தேச துரோகிகள், வேலை செய்வதில்லை என பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
பா.ஜ., எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே அதிரடி கருத்துக்கள் மூலம் பிரபலமடைந்தவர். இவர் 2017-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை திருத்துவோம் என்றார். அதே ஆண்டு சுதந்திர போராட்ட வீரராக வரலாற்று ஆசியரர்களால் கூறப்படும் திப்பு சுல்தானை கொடூர கொலைகாரர், கற்பழிப்பவர் என்றார். சமீபத்தில் காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்றார்.
இந்த நிலையில் அவர் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் பற்றி பேசிய பேச்சு வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தேச துரோகிகளால் நிரம்பியுள்ளது. 88 ஆயிரம் பேர் பணிபுரிந்தாலும் நெட்வொர்க் தரத்தை மேம்படுத்த எதையும் செய்யவில்லை. பெங்களூருவில் சுத்தமாக இணைப்பே கிடைக்காது.

நல்ல கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும் ஊழியர்கள் வேலை பார்க்க தயாராக இல்லை. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஏகப்பட்ட பணம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் 88 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.
பி.எஸ்.என்.எல்லை தனியார்மயமாக்கி அதை மீண்டும் ஒழுங்கிற்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளோம் என பேசினார். அதெல்லாம் சரி பி.எஸ்.என்.எல்லுக்கு ஏன் அரசு இன்னமும் 4ஜி சேவைக்கான உரிமத்தையே தரவில்லை என அதன் ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.