குழந்தையை மாற்றிய நர்ஸ்!! குழப்பத்தால் டி.என்.ஏ.,சோதனை எடுக்க முடிவு..

குழந்தையை நர்ஸ் மாற்றியதால் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்க டி.என்.ஏ.,சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
ம.பி., மாநிலம் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். மற்றொரு பெண்ணும் அதே ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். பிரசவத்திற்காக உடன் வந்திருந்த உறவினர்கள் பதற்றத்துடன் பிரசவ அறை வாசலில் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
முதலில் வந்த பெண்10.35 மணியளவில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இரண்டவதாக வந்த பெண் 10.53 மணியளவில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆபரேஷன் அறையில் இருந்து வெளியே வந்த நர்ஸ் இரண்டாவதாக வந்த பெண்ணின் உறவினரிடம் ஆண்குழந்தையை ஒப்படைத்து விட்டார். பின்னர் ஆபரேஷன் அறைக்கு திரும்பிய நர்ஸ் தனது தவறை உணர்ந்து குழந்தையை ஒப்படைக்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த குழப்பத்தால் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது.
இப்பிரச்னையை தீர்க்க மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மீண்டும் ஆலோசனை நடத்திய மருத்துவ குழு முடிவில் குழந்தைகளுக்கு டி.என்.ஏ.,சோதனை நடத்துவது என முடிவு எடுத்துள்ளது.
இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில் குழந்தைகள் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதால் டாக்டர்கள் கண்காணிப்பில் குறைந்தபட்சம் ஒருவாரம் வரையில் இருக்க வேண்டும். அதற்குள்ளாக குழந்தைகளுக்கு டி.என்.ஏ சோதனை நடத்தப்படும். இந்த பிரச்னை அறிவியல் பூர்வமாக தீர்க்கப்படும் என கூறினார்.
இதனிடையே குழப்பத்திற்கு காரணமான நர்ஸ் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.