ஆரோக்கியம்

வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு..

”வாழைத்தண்டு மாதிரி. எப்படி ஸ்லிம்மா இருக்கா பாரு” என்று சில பெண்களைப் பார்த்து வியந்து சொல்வதுண்டு. அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை ‘சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராள நன்மைகள் உண்டு. இதன் ஒப்பற்ற பயன்களைப்பற்றிக் கூறுகிறார் திருப்பூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் அழகேந்திரன். 

அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாசாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய வாழைத்தண்டு தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துள்ளது. மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது. 

அதன் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது. இந்த கோடைகாலத்தில் நம்மை வாட்டி வதைக்கும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பல பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகளை அளிப்பதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. நம் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள், கோடைகாலத்தில் பலருக்கும் ஏற்படும் சிறுநீரகக் கற்கள் போன்றவற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு. 

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால், வாழைத்தண்டை இடித்து சாறு எடுத்து அருந்தி வர, விரைவிலேயே எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும். ஆண்களுக்கு சிறுநீரோடு கலந்து ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும் ஆற்றலும் வாழைத்தண்டுக்கு உண்டு. விந்துப்பை வீக்கத்தை சரிசெய்யும். 

அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வது அந்த பிரச்னையிலிருந்து விடுபட வழிவகுக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடல் பருமனைக் குறைக்கும். தொப்பை இருப்பவர்கள் வாழைத்தண்டை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டில் அதிகப்படியான தாது உப்புக்கள் மற்றும் புரதச் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு வாழைத்தண்டில் விதவிதமான உணவுகளைச் செய்துகொடுக்க, அவர்களது ஆரோக்கியம் மேம்படும். 

பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் விளையாடுவதில்தான், அதிக நேரத்தை செலவழிப்பார்கள். அவர்களுக்கு வாழைத்தண்டை எப்போதும் போல பொரியலாக மட்டுமே செய்துகொடுக்காமல் ஜூஸ், மோரில் கலந்து நீர்மோர், பச்சடி, சூப்பாக செய்துகொடுக்கலாம். பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டாகவும் செய்யலாம். விரும்பிச் சாப்பிடுவார்கள். 

வாழைத்தண்டு ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. ரத்தசோகை உள்ளவர்கள் வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
வாழைத்தண்டு தவிர வாழைப்பூவும், பிஞ்சும் ரத்த விருத்தியை அதிகரிக்கும். வாழைப்பூவில் வடகம் செய்து சாப்பிட்டால், பித்த நோய்கள் மற்றும் கர்ப்பப்பை பிரச்னைகள் சரியாகும். விஷக்கடி, தீக்காயங்களுக்கு வாழைப்பட்டை, வாழைத்தண்டின் சாறைப் பூசினால், எரிச்சல் போவதுடன், சீக்கிரத்தில் ஆறிவிடும். 

Related Articles

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x