விமான விபத்து: காயமடைந்தவர்களுக்கு ஆளுநர், முதல்வர் ஆறுதல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான விபத்தில் காயமடைந்தவர்களை, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது, முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் நகரில் இருந்து, கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்த ஏர் இந்தியா விமானம், நேற்றிரவு 7 நாற்பது மணியளவில்தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை, கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது, முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதற்கிடையே, விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.