தி.மு.க., உடன் கூட்டணி வைக்க பா.ஜ.க., திட்டமா? – முருகனின் கருத்தால் சர்ச்சை

அதிமுக உடன் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க., வரும் சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க., கூட்டணிக்கு மாறக் கூடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அந்த வகையில் தான் முருகனின் பேட்டியும் அமைந்துள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது அதிமுக – பா.ஜ.க கூட்டணி அமைந்தது. இக்கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. அப்போதே பா.ஜ.கவிடமிருந்து விலக வேண்டும் என்ற குரல்கள் அதிமுகவில் ஒலிக்க ஆரம்பித்தன.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் அதிமுக கட்சி கொடியிலிருந்து அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும் என கருத்து தெரிவிக்க பெரும் சர்ச்சையானது. சிறை செல்ல ஆசைப்படுகிறாரா எஸ்.வி.சேகர் என அமைச்சர் ஜெயக்குமார் கடுகடுத்தார். அதன் பிறகு ஆப்லைனுக்கு சென்றுவிட்டார் எஸ்.வி.சேகர்.
இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க., தலைவர் முருகன், பா.ஜ.க., கை காட்டும் கட்சியே ஆட்சியமைக்கும் என கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க.,வின் தலைவர், தங்கள் கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என கூறாமல், தங்கள் கட்சி கைகாட்டுபவரே ஆட்சியமைப்பர் என கூறியுள்ளார். எனவே தேர்தல் சமயத்தில் தி.மு.க., பக்கம் தாவும் மனநிலைக்கு பா.ஜ.க., வந்துள்ளதோ என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூட பா.ஜ.க., ஒன்றும் தீண்டதகாத கட்சியில்லை என கூறியிருந்தார். மத்தியில் இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருக்க போகும் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் லாபம் தான் என திமுகவும் கணக்கு போடக்கூடும்.
காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்ற முக்கிய தலைவர்களே அதிருப்தி அடைந்து விலகியிருப்பதால் அக்கட்சியை கூட்டணியிலிருந்து கழட்டி விட வேண்டும் என திமுகவில் பலரும் விரும்புகின்றனர். திருச்சி கே.என்.நேரு ஒரு முறை காங்கிரஸை சுமை என்று கூறியதும் இங்கு குறிப்பிட பட வேண்டியது.