விஷ்வ இந்து பரிஷத் தலைவரின் பாதுகாவலர் தற்கொலை

சென்னை திநகர் ராமானுஜம் தெருவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் உள்ளது. அதன் தலைவர் வேதாந்தம். இவரின் பாதுகாப்பு அதிகாரியாக சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த சிறப்பு எஸ்ஐ சேகர் (47) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தின் பின்புறத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கென்று தனி அறை உள்ளது. அங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர், சில நேரம் ஓய்வெடுப்பது வழக்கம். இந்நிலையில் அந்த அறையில் ஓய்வில் இருந்த சேகர் மாலை சுமார் 5 மணியளவில் திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து நெற்றியில் சுட்டுக் கொண்டார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் ஓடிவந்தனர். பாதுகாப்பு அதிகாரி சேகர், ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தி.நகர் துணைகமிஷனர் ஹரிகிரன் பிரசாத், மாம்பலம் உதவிகமிஷனர் கலியன் மற்றும் மாம்பலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் சேகரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, எஸ்ஐ சேகரின் சடலத்தின் அருகில் கிடந்த பிஸ்டல் ரக துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர். தடயஅறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
அப்போது அங்கு எஸ்.ஐ சேகர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில் வீடு கட்டுவதற்காக 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் போய்விடுமோ என மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதப்பட்டிருந்தது.

எஸ்.ஐ தற்கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் அலுவலக ஊழியர்கள் மற்றும் சக பாதுகாவலர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.