“திமுக ஆட்சி அமைந்ததும், ஜெ. மரணத்தில் உள்ள குற்றவாளிகள் சட்டம் முன் நிறுத்தப்படுவர்” – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரனின் இல்லத் திருமண விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதில் காணொலி மூலம் உரையாற்றிய அவர்,
கரோனா காலத்தில் இதுபோன்ற புதுமையான காணொலி மூலம் கலந்துகொள்ளும் திருமணங்கள் நடைபெறுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுமை வழிகள் கிடைத்தாலும், இந்த கரோனா காலத்தைப் பயன்படுத்தி கோடி கோடியாக கொள்ளையடிக்கும் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இருண்ட ஆட்சி தொடர வேண்டும் என விரும்புவோர் இங்கு இரண்டு தரப்பினர் மட்டும்தான். ஒன்று, முதல்வர் பழனிசாமியும், அவருடைய ஆட்சியில் கொள்ளை அடிப்பவர்களும். இரண்டாவது, எடப்பாடி பழனிசாமியையும் அவருடைய கொள்ளைக் கூட்டத்தையும் இயக்கி வரும் மத்திய பாஜக அரசும்.
நீட் தேர்வு மூலம் மாணவர்களின் கனவு தகர்க்கப்பட்டு பயிற்சி மையங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. வேளாண் திட்டங்கள் மூலமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஊழல் என்ற பெயரில் அவர்களே ரெய்டு நடத்தி, சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். இந்த இருண்ட ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.
ஆறுமுகசாமி ஆணையத்தை முதல்வரும், துணை முதல்வரும் முடக்கி வைத்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
இன்னும் 6 மாதத்தில் தமிழக மக்கள் உதயசூரியனுக்கு ஆதரவான தீர்ப்பைத் வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் புதிய ஒளி பிறக்கப் போகிறது என்று பேசியுள்ளார்.