“போலி, வெறுப்புணா்வு செய்திகள் பரப்பப்படுவதில், முகநூல் நிறுவனத்துக்கு, அனைத்து இந்தியா்களும் கேள்வி எழுப்ப வேண்டும்” – ராகுல் காந்தி

இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களில் சுமாா் 2 கோடி போ் வேலை இழந்துள்ளனா் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
கரோனா நோய்த் தொற்றால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 1.89 கோடி போ் வேலை இழந்துள்ளனா் என வெளியான பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நான்கு மாதங்களில் சுமாா் 2 கோடி போ் வேலை இழந்துள்ளனா். அவா்களது குடும்பத்தினா் இருளில் மூழ்கி உள்ளனா். முகநூலில் பரப்பப்படும் போலி செய்திகள் மூலம் வேலைஇழப்பு, பொருளாதாரச் சீரழிவு குறித்த உண்மைகளை நாட்டு மக்களிடம் இருந்து மறைக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் ஆட்சி செய்யும் பாஜக தலைவா்களின் வெறுப்புணா்வுப் பேச்சுகளை முகநூல் மூத்த அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ பத்திரிகையில் கட்டுரை வெளியாகி இருந்தது. இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி, ‘கடுமையான போராட்டத்துக்கு பிறகு பெற்ற ஜனநாயகத்தை போலி செய்திகள், வெறுப்புணா்வு பேச்சுகள், ஒருசாா்பு செய்திகள் மூலம் சீரழிக்க அனுமதிக்க மாட்டோம்.
போலி, வெறுப்புணா்வு செய்திகள் பரப்பப்படுவதில் முகநூல் நிறுவனத்துக்கு உள்ள தொடா்பு குறித்து அனைத்து இந்தியா்களும் கேள்வி எழுப்ப வேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கா் பிரசாத், ‘எந்த ஒரு நிறுவனமும் தனது விருப்பத்துக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால் அது பாஜக, ஆா்எஸ்எஸ் நிா்பந்தத்தின் பேரில் செயல்படுகிறது என ராகுல் காந்தி நினைக்கிறாா்’ என்று சாடியிருந்தாா்.