கண்ணீருடன் கலங்கி நின்ற திருநங்கை…, ஆதரவு தந்து கண்ணீர் துடைத்த ஆயிரம் கைகள்!!!

பிரியாணி விற்கும் திருநங்கைக்கு ஏற்பட்ட துன்புறுத்தலை கேள்விப்பட்டு பலரும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் திருநங்கை சாஜ்னா சாஜி. கடந்த வாரத்தில் சாலையோரம் பிரியாணி விற்றபோது, சிலரால் கேலி செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இதையடுத்து மக்களிடம் உதவி கேட்டு அவர் பதிவிட்ட வீடியோ பிரபலமாகி, பிரியாணி உணவகம் தொடங்கும் அளவுக்கு உதவிகள் குவிந்து விட்டன.

மலையாள நடிகர் ஜெயசூர்யா, சாஜ்னாவுக்காக ஒரு உணவகத்தைத் தொடங்க முன்வந்துள்ளார். மலப்புரத்தைச் சேர்ந்த சமூக சேவகர் நாசர் மனு, வீடு ஒன்றை கட்டித்தந்து உதவி செய்ய உள்ளார். மேலும், திருநங்கைக்கு உதவும் நோக்கத்தில் கடந்த  அக்டோபர் 15 முதல் பிரியாணி விற்று நடிகர் சந்தோஷ் கீழாட்டூர் ஆதரவு தந்துள்ளார்.

இதுகுறித்து திருநங்கை சாஜ்னா கூறுகையில், “ஜெயசூர்யாவிடம் பேசினோம். அவர் உணவகம் தொடங்க உதவுவதாகக் கூறினார். அதற்கான இடத்தை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். கொச்சியில் தொடங்கினால் அதிக செலவாகும். விரைவில் இடத்தைக் கண்டுபிடித்துவிடுவேன்” என்று தெரிவித்தார்.

சாஜ்னா கடந்த வாரத்தில் வெளியிட்ட வீடியோவில், தான் எடுத்து வந்திருந்த பிரியாணி அனைத்தும் விற்பனையாகாமல் வீணாகிப் போனது பற்றி பேசியிருந்தார். மேலும், சில நாட்களாக அருகிலுள்ள கடைக்காரர்கள் அவரை கேலி செய்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். சிலர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளதும் வீடியோ மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இவ்வாறு உதவிகள் குவிந்து வருகின்றன.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவும் அவரிடம் தொலைபேசி மூலம் பேசி உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். பஹத் பாசில் போன்ற பிரபலங்களும் சாஜ்னாவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x