“எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்க கூடாது!” துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு!

எந்த மொழியையும் எதிர்க்கவோ, திணிக்கவோ கூடாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஹிந்தி தினம் 2020 ஐ முன்னிட்டு நடந்த கருத்தரங்கில், வீடியோ கான்பரன்சிங் முறையில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு பேசியதாவது: “நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாற்றை கொண்டுள்ளது. நமது மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.
தென் இந்திய ஹிந்தி பிரசார சபையை மஹாத்மா காந்தி, 1918 ம் ஆண்டு ஏற்படுத்தினார். ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று நிறைவை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்பட வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட வேண்டும். எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது. எதிர்க்கவும் கூடாது.
மக்களிடம் நல்லெண்ணம், அன்பு மற்றும் பாசத்தை அதிகரிக்க, ஹிந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், ஹிந்தி கற்க வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தமிழ், கன்னடம் தெலுங்கு போன்ற ஏதாவது ஒரு மொழியை கற்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.