பயணிகளுக்காக அசத்தல் திட்டத்தை கொண்டு வந்து ஆச்சரியமூட்டும் இந்தியன் ரயில்வே!!

ரயில் பயணிகளின் உடைமைகளை(லக்கேஜ்) அவர்களின் வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் புதிய திட்டத்தை வடக்கு ரயில்வே தொடங்க உள்ளது.
செயலி அடிப்படையிலான ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற திட்டத்தை வடக்கு ரயில்வே தொடங்க உள்ளது. சேவையை நாட்டிலேயே முதல்முறையாக வடக்கு ரயில்வேயின் டெல்லி கோட்டம் நேற்று அறிவித்தது. இந்த சேவை முதல்கட்டமாக புதுடெல்லி, டெல்லி ஜங்ஷன், ஹஸ்ரத் நிஜாமுதீன், டெல்லி கன்டோன்மென்ட், டெல்லி சராய் ரோகில்லா, காசியாபாத், குருகிராம் ஆகிய ரயில் நிலையங்களில் தொடங்குகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ரயில் பயணிகளின் உடைமைகளை அவர்களின் வீட்டுக்கு கொண்டு சேர்க்கவும், அதுபோல் வீட்டில் இருந்து உடைமைகளை ரயில் பெட்டிக்கு கொண்டு வரவும் முடியும். இதற்கான ஒப்பந்தம், தனியார் நிறுவனத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டதால் இந்த சேவை வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “இந்த சேவைக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும். சுமையின் எடை, எண்ணிக்கை மற்றும் தூரத்தின்அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். பயணக்கட்டணம் அல்லாத வழியில் ரயில்வே ஈட்டும் வருவாயை இந்த சேவை உயர்த்தும்.
ஆன்ட்ராய்டு செல்போன், ஐ போன் வைத்திருப்போர் பயன்படுத்தும் வகையில் ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’ செயலி (BOW APP) விரைவில் அறிமுகம் செய்யப்படும். இதைப் பயன்படுத்தி பயணிகள் சேவையைப் பெறலாம். ரயிலில் தனியாக பயணம் செய்யும் முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டம் மிக உதவியாக இருக்கும்” என்றனர்.