நடுவீதியில் மனைவியை தாக்கிய குடிகாரனை தடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!!!

சென்னை வில்லிவாக்கம், கிழக்கு மாட வீதியில் இளவரசன்(22) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வார் என கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு மது போதையில் வந்தவர், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு சாலையில் வைத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, அவ்வழியாக ரோந்து வாகனத்தில் வந்த வில்லிவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வமணி அங்கு சென்று சமாதானம் செய்துள்ளார். எனினும் இளவரசன் மனைவியை தாக்குவதற்கு ஓடி ஓடி சென்றதால் உதவி ஆய்வாளர் செல்வமணி இளவரசனை மடக்க முயன்றனர்.
இதில் ஆத்திரமடைந்த இளவரசன், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, உதவி ஆய்வாளர் செல்வமணியை வெட்டினார். இதில், அவரது இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. மேலும் தடுக்க முயன்ற பக்கத்து வீட்டை சேர்ந்த கதிர்வேலுக்கும் வெட்டு விழுந்தது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் காவல் உதவி ஆய்வாளர் உள்பட இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதே நேரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிகாரன் இளவரசனை கைது செய்து, தெளிய வைக்க காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.