“இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 22 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்” மக்களவை செயலாளர் அறிவிப்பு!!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை 22 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று மக்களவை செயலாளர் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.
1,350 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும், முக்கோண வடிவிலும் இந்த கட்டிடம் அமைய உள்ளதாக தெரிகிறது. இந்த புதிய நாடாளுமன்றத்தின் மாதிரி வரைபடங்களை அகமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி. டிசைன் நிறுவனம் ஒன்று தயார் செய்தது.
நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தத்திற்கான டெண்டரில் டாடா புரொஜெக்ட்ஸ் நிறுவனம், எல் அண்ட் டி உள்ளிட்ட பல முன்னணி இந்திய நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில், 861 கோடியே 90 லட்சத்துக்கு டெண்டர் கோரியிருந்த டாடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கி, 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடியுமென கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பிக்கும் நவீன வசதிகளுடன் கூடிய தனி அலுவலகம், நூலகம், கூட்ட அரங்குகள், உணவகம், வாகன நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படும் என்றும், கட்டுமான பணிகளால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளின் போது காற்று, ஒலி மாசு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.