பட்டாசுகளுக்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை தடை விதித்தது டெல்லி அரசு!!

டெல்லியில் அனைத்துவிதமான பட்டாசுகளுக்கும் நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சத்தியேந்திர ஜெயின், “காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பட்டாசுகள் வெடிப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று நேற்று (வியாழக்கிழமை) முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டதைக் குறிப்பிட்டார். அந்தவகையில் டெல்லியில் அனைத்து விதமான பட்டாசுகளுக்கும் நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாகக் கூறினார்.
டெல்லியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வீசுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சத்யேந்திர ஜெயின், இரண்டாம் கட்ட கொரோனா பரவலால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, ”இரண்டாம் கட்ட கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 7,231 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் டெல்லியில் 8,572 கொரோனா படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக கொரோனா படுக்கைகளை அதிகரித்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம்” என்று சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.