உலகின் நீண்ட கால பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிபா பின் சல்மான் அமெரிக்காவில் இன்று காலமானார்!!

பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிபா பின் சல்மான் அமெரிக்க மருத்துவமனையில் இன்று காலமானார்.
பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிபா பின் சல்மான அல் கலிபா(84) இன்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஷேக், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை பஹ்ரைன் அரண்மனை அறிவித்துள்ளது. அவரது மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மன்னர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து உடல் சொந்த வீட்டிற்கு வந்த பின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலம் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் உறவினர்கள் கலந்து கொள்ளவார்கள் என கூறப்படுகிறது.
உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவராக விளங்கியவர் பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935-ம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியாகவும் இருந்து வந்தார். ஆகஸ்ட் 15, 1971 பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.