“பாஜகவுக்கு ஆதரவான தபால் வாக்களிக்கும் முறையை இந்தியத் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்” மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

“தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான தபால் வாக்களிக்கும் முறையை இந்தியத் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்” என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் சலுகை அளிப்பது போன்று ‘தபால் வாக்களிக்கும் முறை’ எனும் பாசக்கயிற்றை அறிமுகப்படுத்தி பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு துணைபோகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பாரபட்சமான சுற்றறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெறவேண்டும். பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குப்பதிவில் சாதகமான சூழலை உருவாக்கவே பிகார் மாடல் தேர்தல் உருவாக்கப்பட்டது. பிகாரில் பாஜக கூட்டணியின் வெற்றி நாட்டு மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுளது.

வாக்களிப்பது ஒருவருடையை ரகசியமான தனிப்பட்ட உரிமை. அதைப் பாதிக்கும் வகையில், நேரடியாகத் தபால் வாக்குச் சீட்டுக்களைக் கொண்டு போய்க் கொடுத்து, வாக்குகள் பதிந்து பெறுவது என்பது, ரகசியமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும் கடைப் பொருள்களாக்கி, கேலிக்கூத்தாக்கி விடும். சுதந்திரமான – நேர்மையான – நியாயமான தேர்தலை, அடியோடு நாசப்படுத்தும் கடும் விளைவுகள் குறித்துக் கவலைப்படாமல், இந்தியத் தேர்தல் ஆணையமே, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான, வாக்களிப்பு முறையை ஊக்குவிப்பது கவலையளிக்கிறது.

தபால் வாக்கு அளிக்கும் வாய்ப்பினை, எவ்வித வெளிப்படையான நடைமுறைகளும் இன்றிக் கொடுப்பது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதித்து தேர்தல் ஆணையம் உறுதி செய்திட வேண்டும்.

‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர் முறை’ ஆளுங்கட்சிக்கும் – எதிர்க்கட்சிக்கும் இடையில், ஒரு சமமான – நேர்மையான தேர்தல் களத்தை நிச்சயம் உருவாக்காது. இதனால் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் – மாற்றுத் திறனாளிகளுக்கும், சலுகை அளிப்பது போன்று தபால் வாக்களிக்கும் முறை என்ற பாரபட்சமான சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x