“நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்!!

“நெருங்கி வரும் நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பரந்த பரப்பளவை மையம் கொண்டு தமிழகத்தை நோக்கி நிவர் புயல் நகர்ந்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகம் பல்வேறு புயல்களை சந்தித்துள்ளது. அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நாம் ஏற்கனவே அறிந்ததுதான். பொதுமக்கள் இந்த புயலின் பாதிப்புகளை எதிர் கொள்வதற்கு முன்கூட்டியே தயாராக வேண்டும். புயல் தாக்கினால் மின் கம்பங்கள் சேதமடையலாம். எனவே மக்கள் தங்களிடம் இருக்கும் டார்ச் லைட், பேட்டரிகள், பவர் பேங்குகள் போன்றவைகளை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும். அதுபோல மெழுகுவர்த்திகள், மண்ணெண்ணெய் விளக்குகள், கை விசிறிகள், கொசுவர்த்திகள், தீப்பெட்டிகள் போன்ற பொருட்களை தேவையான அளவிற்கு வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளவும்.
அதுமட்டுமின்றி மூன்று நாட்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கடும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை பொதுமக்கள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் தயார் நிலையில் இருந்து மக்களுக்கு தேவையான உதவிகளை களம் இறங்கி பணியாற்றிட வேண்டும். சாதி மதம் கடந்து அனைத்து சமுதாய மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.