பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட கணவன், மனைவி!!

ஈரோட்டில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவி இருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுல்லாம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மற்றும் அவரது மனைவி அருக்கானி. இவர்களுக்கு மேனகா என்ற திருமணம் ஆன மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மேனகா தீபாவளி பண்டிகைக்காக கணவருடன் தனது தந்தையின் வீட்டுக்கு வந்த போது ஊரின் எல்லைப் பகுதியில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு பட்டாசுவெடித்து கொண்டு இருந்தனர். அப்போது இளைஞர்கள் பட்டாசுகளை பற்ற வைத்து மேனகா மீது எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேனகாவுக்கும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது அங்கு வந்த ராமசாமி மற்றும் அருக்காணி, அங்கிருந்த இளைஞர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊர் மக்கள் அனைவரும் ராமசாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று காலையில் அரிவாள் வெட்டு காயங்களுடன் ராமசாமி மற்றும் அவரது மனைவி வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக 7 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.