அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப்க்கு வந்த விஷக்கடிதம்!!
அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப்க்கு கடும் விஷத்துடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஊடக சந்திப்பில் கூறுகையில், “இந்த சம்பவம் இந்த வாரத் துவக்கத்தில் நடந்துள்ளது. ‘ரிசின்’ என்ற ஒருவகையான கடுமையான விஷத்தினைக் கொண்ட கடிதம் ஒன்று, வெள்ளை மாளிகையின் கடிதங்கள் சோதனைப் பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்.பி.ஐ மற்றும் ரகசிய பிரிவு போலீசார் இந்தக் கடிதம் எங்கிருந்து அனுப்பட்டது என்பதனைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அனேகமாக கனடாவில் இருந்து அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கக் கூடும் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக கனடிய போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தற்போது பொதுமக்களுக்கு இதனால் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிகைக்கு இது போன்ற நச்சுப் பொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு நச்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. பின் கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆமணக்கு விதையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ‘ரிசின்’ என்ற விஷத்தினை உட்கொண்டால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் என ஏற்பட்டு இறுதியில் உள்ளுறுப்புகள் செயலிழந்து மரணம் சம்பவிக்கும். அதேசமயம் இதற்கான வலிமையான முறிமருந்துகள் எதுவும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.