தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட சுஷாந்தின் காதலி வீடியோ வெளியீடு!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் நடிகை ரியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உண்மை வெல்லும் என கூறியுள்ளார்.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக விளங்கிய சுஷாந்த் சிங், கடந்த ஜூன் 14-ம் தேதி அவரது மும்பை பாந்த்ரா குடியிருப்பில் தூக்கிட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக சுஷாந்தின் காதலி ரியா, பாலிவுட் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், சுஷாந்தின் சகோதரி உட்பட 40 பேரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கில் முக்கிய திருப்பமாக சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னா போலீஸில், தனது மகன் இறப்புக்கு காதலி ரியா தந்த மன உளைச்சல் தான் காரணம் என்று புகார் அளித்தார். மேலும் கடந்த ஓராண்டில் ரூ.15 கோடி தனது மகன் கணக்கிலிருந்து அவருக்கு தொடர்பில்லாத பிற கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என கூறியிருந்தார். சதி செய்து தற்கொலைக்கு தூண்டியதாகவும் ரியா மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக பீகார் போலீஸ் விசாரணையை தொடங்கினர். சந்தேகத்திற்கு இடமான பணப்பரிமாற்றம் என்பதால் அமலாக்கத்துறையும் வழக்கிற்குள் வந்துள்ளது. இவை எதற்கு கருத்து தெரிவிக்காமல் இருந்த ரியா, தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடவுள் மீதும் நீதித்துறை மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். மீடியாவில் என்னைப் பற்றி நிறைய கொடூரமான விஷயங்கள் கூறப்பட்டாலும், இந்த விவகாரம் நீதித்துறையின் கீழ் இருப்பதால் எனது வழக்கறிஞர்களின் ஆலோசனையைப் பின்பற்றி கருத்து தெரிவிப்பதை நான் தவிர்க்கிறேன். சத்யமேவ ஜெயதே. உண்மை வெல்லும். இவ்வாறு கூறியுள்ளார்.