இன்னும் இரண்டு தினங்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம்… முதல்வர் அனுமதி

வரும் 10-ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா அச்சம் காரணமாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கேற்ப, தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், வரும் 10-ம் தேதி முதல், மாநகராட்சி பகுதிகளில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ள மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை ஆட்சியர்களிடம் அனுமதி பெற்று திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, தமிழகம் முழுவதும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை வரும் 10-ம் தேதி முதல் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழகம் முழுவதும் ஊராட்சி பகுதிகளில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.