நெருக்கடியில் சிக்கினார் அனில் அம்பானி…

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்குவது தொடர்பான மதிப்பீட்டிற்கு வல்லுனர் ஒருவரை நியமிக்க தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது அனில் அம்பானியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரிலையன்ஸ் இன்ப்ராடெல் நிறுவனங்கள் இரண்டும் சீன நிறுவனங்கள் மற்றும் இந்திய வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்பத் தர 2016ல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் 1200 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன.இந்த கடனுக்கு அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்திருந்தார். இது வாராக் கடனாக மாறியது.
இதையடுத்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அனில் அம்பானி அளித்த உத்தரவாதத்தின் பேரில் அவரது சொத்துக்களை முடக்கக் கோரி மும்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு தொடர்பான இரு தரப்பு விசாரணை ஜூன் 30ல் முடிவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று திவால் நிர்வாக வல்லுனர் ஒருவரை நியமிக்க உத்தரவிட்டு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இது அனில் அம்பானிக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திர் அண்டு திர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஆஷிஷ் பியாசி கூறியதாவது:அனில் அம்பானி சொத்துக்களின் மதிப்பு குறித்து ஆராய 10 நாட்களுக்குள் வல்லுனர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
அவர் அடுத்த 10 நாட்களுக்குள் தனது அறிக்கையை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்வார். சொத்துக்களை முடக்கவோ அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மனுவை தள்ளுபடி செய்யும்படி பரிந்துரைக்கவோ அவருக்கு உரிமை உள்ளது. எனினும் இறுதி முடிவை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தான் எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
அனில் அம்பானி நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் 49ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது உத்தரவாதம் அளித்தது தொடர்பான வழக்கு அனில் அம்பானிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.