இந்தியாவில் அதிக தற்கொலை நடக்கும் நகரங்களில் சென்னை முதலிடம்! – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 381 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் புள்ளி விவரங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையின் படி, “ அதில் கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே எண்ணிக்கை 2018-ம் ஆண்டு சுமார் 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 ஆக இருந்தது.

விவசாயிகள் தற்கொலை

நகரங்களில் 13.8% தற்கொலைகள் அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு 10 ஆயிரத்து 281 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டை விட குறைவு தான். 2018-ம் ஆண்டு 10 ஆயிரத்து 357 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் தினக்கூலி வேலை செய்பவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டு 30 ஆயிரத்து 132 ஆக இருந்த எண்ணிக்கை, 2019-ம் ஆண்டு 32 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையில் 7.4% பேர் விவசாயிகள். 2015-ம் ஆண்டு வெளியான அறிக்கையில், தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் இடம்பெற்றிருந்தது. ஆனால் இப்போது காரணம் குறிப்பிடாமல், அதற்கு பதில் ஆண், பெண் என தற்கொலை செய்துகொண்டவர்களின் பாலினம் குறிப்பிடப்படுகிறது.

2019-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 5,563 பேர் ஆண்கள் மற்றும் 394 பேர் பெண்கள். அதோடு தற்கொலை செய்துகொண்ட விவசாய கூலி வேலை செய்பவர்களில் 3,749 பேர் ஆண்கள் மற்றும் 575 பேர் பெண்கள். மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரகாண்ட், மணிப்பூர், சண்டிகர், தாம் & டியு, டெல்லி, லக்‌ஷத்தீப் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

சென்னை முதலிடம்

சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நடந்துள்ளன. சென்னையில் 2,461 பேரும், டெல்லியில் 2,423 பேரும், பெங்களூருவில் 2,081 பேரும், மும்பையில் 1,229 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சென்னையில் தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நடந்துள்ளது. இந்தியாவில் 53 நகரங்களில் மட்டும் 36.6 % பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 53.6% பேர் தூக்கிட்டும், 25.8% பேர் விஷம் அருந்தியும், 5.2% பேர் நீரில் மூழ்கியும், 3.8% பேர் வேறு சில வழிகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல குடும்ப பிரச்னை காரணமாக 32.4% பேரும், திருமணம் தொடர்பான பிரச்னை காரணமாக 5.5% பேரும், உடல் நலக்குறைவால் வலி தாங்காமல் 17.1% பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுவே மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 55% ஆகும். ஒவ்வொரு 100 தற்கொலைகளிலும் 70.2 பேர் ஆண்கள் மற்றும் 29.8 பேர் பெண்கள். தற்கொலை செய்து கொண்ட ஆண்களின் 68.4% பேர் திருமணம் ஆனவர்கள். அதேபோல திருமணம் ஆன பெண்கள் 62.5% பேர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18 ஆயிரத்து 916 பேரும், தமிழகத்தில் 13 ஆயிரத்து 493 பேரும், மேற்கு வங்கத்தில் 12 ஆயிரத்து 665 பேரும், மத்திய பிரதேசத்தில் 12 ஆயிரத்து 457 பேரும், கர்நாடகாவில் 11 ஆயிரத்து 288 பேரும் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது மொத்த எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் 13.6% பேரும், தமிழகத்தில் 9.7% பேரும், மேற்கு வங்கத்தில் 9.1% பேரும், மத்திய பிரதேசத்தில் 9% பேரும், கர்நாடகாவில் 8.1% பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் 49.5% தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மீதமுள்ள 50.5% தற்கொலைகள் மற்ற 24 மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3.9% தற்கொலைகள் நடந்துள்ளன. அதிக எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அதிகமாக தமிழகத்தில் தான் நிகழ்ந்துள்ளன. அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரா, கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x