கொரோனாவை கண்டுபிடிக்க, மும்பை வீரர்களுக்கு ‘ஸ்மார்ட் ரிங்’!! பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரும் மும்பை அணி..

கொரோனாவில் இருந்து தப்பிக்க மும்பை வீரர்கள் ‘ஸ்மார்ட் ரிங்’ அணியவுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 19–நவ. 10) நடத்தப்பட உள்ளது. தொடரின் போது வீரர்களுக்கு கொரோனா தொற்றாமல் இருக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
‘புளூடூத்’ உதவியில் இயங்கும் ‘கான்டாக்ட் டிரேசிங் டிவைஸ்’ அனைத்து அணிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இதிலுள்ள ‘ஹெல்த் ஆப்’ வழியாக உடல்நிலை குறித்த தகவல்களை வீரர்கள் தினமும் பதிவு செய்ய வேண்டும்.
மும்பை அணி சார்பில், பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவில் என்.பி.ஏ., கூடைப்பந்து வீரர்கள் பயன்படுத்துவதைப் போல, ஒவ்வொருவருக்கும் ‘ஸ்மார்ட் ரிங்’ கொடுக்க முடிவு செய்துள்ளது. இது தரும் தகவலுக்கு ஏற்ப, வைரஸ் பரவலுக்கான வாய்ப்புகளை முன்னதாக கணித்து, அதை தடுக்கும் முயற்சிக்கலாம்.
வீரர்களின் இருதயத் துடிப்பு, சுவாச விகிதம், உடல் வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து தருகிறது. உடலில் ஏதாவது மாறுபாடு ஏற்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்கும். இதனால் பிரச்னையை துவக்கத்திலேயே கண்டறிந்து சரி செய்யலாம்.
மும்பை வீரர் ஒருவர் கூறுகையில்,‘‘ மும்பையில் இருந்து முழு கவச உடை அணிந்து தான் வந்தோம், வீரர்கள், பயிற்சியாளர்கள் பாதுகாப்பு, உடல்நலத்துக்கு மும்பை அணி முக்கியத்துவம் தருகிறது. இதனால் தான் நாங்கள் குடும்பத்துடன் வந்துள்ளோம்,’’ என்றார்.