“வேளாண் மசோதாக்களை செயல்படுத்த விடமாட்டோம்!” உறுதியளித்த மராட்டிய துணை முதல்வர்!

வேளாண் மசோதாக்களை மகாராஷ்டிரத்தில் செயல்படுத்தாமல் தடுப்பதற்கு போதிய முயற்சிகளை எடுப்போம் என்று அம்மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் வேளாண் மசோதாக்கள் குறித்து செய்தியாளர்களிடம் அஜித் பவார் பேசியதாவது, ”மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களால் பயன் இல்லை என்பதால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் கருத்துகள், விவசாயிகளின் குரல்களுக்கு செவிசாய்க்காமல் அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? வேளாண் மசோதாக்களை மகாராஷ்டிரத்தில் செயல்படுத்தாமல் தடுப்பதற்கு போதிய முயற்சிகளை எடுப்போம்.
இந்த மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டதால், மசோதாக்களின் சட்டபூர்வமான தன்மைகளை மாநில குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று அஜித் பவார் கூறினார்.