காங்கிரஸ் Vs ஆன்ட்டி காங்கிரஸ்… ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் யாருக்கு தீர்ப்பளிக்கபோகிறது?

சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு நோட்டீஸ் வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எந்தவித தடையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள், ஆட்சியை கவிழ்க்க முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு பின்னணியில் பா.ஜ.க செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து சதிகார எம்.எல்.ஏ.க்களின் பதவியை ஏன் பறிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி, சபாநாயகர் சி.பி, ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீஸ்க்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களும் வழக்கு தொடந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் 19 பேரின் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத்தடை விதித்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சபாநாயகர் சிபி ஜோஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘19 எம்எல்ஏக்கள் பதவி நீக்க நோட்டீஸ் விவகாரத்தில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது; அதனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடை விதிக்க வேண்டும்’ என்று கோரினார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உயர் நீதிமன்றம் என்னதான் உத்தரவு பிறப்பிக்கப்போகிறது என்பதை அறிய சபாநாயகரால் ஒருநாள் காத்திருக்க முடியாதா? அதனால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ள உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது’ என்று மறுத்துவிட்டது. இன்று காலை 10.30 மணிக்கு, சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு நோட்டீஸ் வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.