ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவா?? சீரம் இன்ஸ்டிடியுட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

ஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பக்கவிளைவு காரணமாக இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதற்கிடையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிஜிசிஐ) சீரம் இன்ஸ்டிடியுட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில், பிற நாடுகளில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மனிதப்பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் அது தொடர்பான தகவல்களை சீரம் இன்ஸ்டிடியுட் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.

மேலும், இந்தியாவில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா? என்ற தகவலையும் சீரம் இன்ஸ்டிடியுட் தற்போதுவரை தெரிவிக்கவில்லை.

ஆகையால், மருந்து செலுத்தப்படுபவர்களை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனையை ஏன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கூடாது. மேலும், இந்த நோட்டீசுக்கு சீரம் இன்ஸ்டிடியுட் உடனடியாக பதிலளிக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x