டெல்லியில், வெப்பம் குறையும் என்பதால் காற்றின் மாசு அதிகரிக்கும் அபாயம்!!

உலகில் காற்றின் தரம் அடிக்கடி மோசமாகும் நகரங்களில் டெல்லி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதிகரித்துள்ள வாகனங்களின் புகை, பஞ்சாப், அரியானா போன்ற அண்டை மாநிலங்களில் வயல்கழிவுகளை எரிப்பதால் கிளம்பும் புகை போன்றவை டெல்லியில் காற்று மாசை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு டெல்லியில் காற்று மாசை வெகுவாக குறைத்தது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள் காற்றின் தரம் ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. அதன்பிறகு பரவாயில்லை என்ற நிலைக்கு வந்தது. ஆனால் ஜூன் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக மீண்டும் நேற்று காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது.
அதாவது காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் அது நல்ல நிலை. 50-க்கு மேல் 100 வரை என்பது சுமாரான நிலை. 100-க்கு மேல் 200 வரை மிதமான நிலை. 200-க்கு மேல் 300 வரை மோசமான நிலை. 300-க்கு மேல் 400 வரை மிக மோசமான நிலை.
டெல்லியில் நேற்று காலை நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு 207 ஆக இருந்ததாக தெரிவித்துள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இனி வெப்பநிலை குறையும் என்பதால் மாசுவின் அளவு அதிகரிக்கும் என்றும் எச்சரித்து உள்ளது.