பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம்; பாகிஸ்தான் அதிரடி சட்டம்!!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களின் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உலகெங்கிலும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு நாடும் இந்தக் குற்றங்களுக்கு எதிராக கடும் சட்டங்களை இயற்றி வருகிறது. இந்தியாவில் போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் கொண்டுவரப்பட்டு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது, இதேபோல அண்டை நாடான பாகிஸ்தானும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக உச்சபட்ச தண்டனை கொண்டுவர இருக்கிறது. அதன்படி, பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், “பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு முன்மாதிரியான தண்டனை அளிக்கும் மூன்று அடுக்கு சட்டத்தை அரசு விரைவில் அறிமுகப்படுத்தும்” என்றார்.

அதன்படி, ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை அளிக்க நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாலியல் சட்டத்திருத்த வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு, நேற்று நடந்த பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதலில் மசோதா தொடர்பான விவாதத்தில், பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் யோசனை தெரிவித்தனர். ஆனால், அந்த யோசனைகளை நிராகரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு இம்ரான் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

“எங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பானச் சூழலை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ள இம்ரான் கான், இது ஒரு தீவிரமான விஷயம், தாமதிக்கக்கூடாது என்று விரைவாக சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயங்கள் குறித்து கவனம், செலுத்தி வருகிறார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்தச் சட்டம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கும். பாலியல் சீண்டல்களில் இருந்து தப்பியவர்கள் அச்சமின்றி புகார்களை பதிவுசெய்ய முடியும். அரசாங்கம் அவர்களின் அடையாளத்தை பாதுகாக்கும். இதற்கு காஸ்ட்ரேஷன் (ஆண்மை நீக்கம்) சட்டம் ஒரு தொடக்கமாக இருக்கும்” என்றும் இம்ரான் பேசியுள்ளார். ஏற்கெனவே அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், விரைவில் இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் செனட்டர் பைசல் ஜாவேத் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பாலியல் சட்டங்களைப் பற்றி நிறைய விவாதங்கள் நடந்து வந்துள்ளன. 2018 ஜனவரியில் லாகூரில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தது. சமீபத்தில் லாகூரில் மோட்டார் வண்டிக் கும்பல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த இந்தச் சட்டம் இயற்றுவது குறித்த தீவிரத்தை உணர்த்தியது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x