“அரசின் அனுமதி பெற்றுதான் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது!” துணைவேந்தர் சூரப்பா விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வை ரத்து செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 23ஆம் தேதி அறிவித்தார்.
செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், பொறியியல் கல்லூரிகள் தேர்வுக்கான கட்டணத்தை வசூலித்தன. இதனால் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். பல அரசியல் தலைவர்களும் தேர்வுக்கட்டண வசூல் பற்றி கருத்து கூறியிருந்தனர்.
மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை அனுப்பி வைக்குமாறு கல்லூரிகளை அண்ணா பல்கலைக் கழகம் கேட்டுக் கொண்டது. எழுதாத தேர்வுக்கான கட்டணம் கல்லூரிகளால் திருப்பி வழங்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த அறிவிப்பு மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகம் தனது இணைப்பு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டது. அதில் தேர்வு கட்டணத்தை செலுத்தாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்பட்டது. மேலும் நடைபெறாத தேர்வுகளுக்கு எதற்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், செமஸ்டர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 30ஆம் தேதி கடைசி நாள் என்றும், அவ்வாறு செலுத்த தவறுபவர்கள் அபராத தொகையுடன் செப்டம்பர் 5க்குள் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா,’தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது, சான்றிதழ்கள் அச்சடிப்பது என்று இதர பணிகளுக்கான செலவுகள் இருப்பதால் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கட்டணம் வசூல் செய்வதில், பல்கலைக்கழகம் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுகிறது என்று கூறியுள்ளார்.