கந்து வட்டி கும்பல் டார்ச்சர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!!

சேலத்தில், கந்து வட்டி கும்பலின் டார்ச்சரால், ஒரே குடும்பத்தை சேர்ந்த, நான்கு பேர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம், பொன்னம்மாபேட்டை, வாய்க்கால்பட்டறை, வால்காட்டை சேர்ந்தவர் முருகன், 38. இவர், சேலம் கோட்டையில் உள்ள, சலூன் கடையில், 15 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். இவர் மனைவி கோகிலா, 34. இவர்களுக்கு மதன்குமார், 19, வசந்தகுமார், 17, கார்த்தி, 12, என, மூன்று மகன்கள் இருந்தனர். இதில், மதன்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்காக உறவினர்கள், நண்பர்கள் என, பலரிடமும் முருகன் கடன் வாங்கினார். அந்த கடனை அடைக்க போதிய வருமானம் இல்லாததால், கந்து வட்டியும் வாங்கி உள்ளார். இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு முன், மதன்குமார் இறந்தார். அவர் இறப்பால், குடும்பமே விரக்தியின் உச்சத்துக்கு சென்றது. இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் மட்டுமின்றி, கந்து வட்டி கும்பலும், முருகன் குடும்பத்துக்கு டார்ச்சர் கொடுத்தது. வேறு வழியின்றி பத்தாம் வகுப்பு படித்து வந்த, வசந்தகுமாரை பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டு, முடிதிருத்தும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தில், மூன்று பேர் வேலை செய்தும், கடன் செலுத்தவே முடியாததால், குடும்பத்தை நடத்த முடியவில்லை. நேற்று காலை வழக்கம் போல், பயிற்சிக்கு சென்ற வசந்தகுமாருக்கு, முருகன் போன் செய்து வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். பின்னர், முருகன், அவர் மனைவி கோகிலா, மகன்கள் வசந்தகுமார், கார்த்தி ஆகிய நான்கு பேரும், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
நீண்ட நேரமாக வீடு பூட்டி கிடப்பதை கண்டு, அப்பகுதி மக்கள் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சந்திரசேகரன், உதவி கமிஷனர் அனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், சிவகாமி ஆகியோர், சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர், தற்கொலை செய்து கொண்டதற்கு, மூத்தமகன் மதன்குமாரின் இறப்பு காரணமா அல்லது கந்து வட்டி, கடன் கொடுத்த கும்பலின் டார்ச்சர் காரணமா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.