அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு!!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு சளி, காய்ச்சல் காரணமாக சென்னை,ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு. 94 வயதான இவர், அவ்வப்போது கட்சிக் கூட்டங்கள், போராட்டங்களில் கலந்துகொள்வார். இந்நிலையில், நேற்று (ஆக.20) இரவு, சளி, காய்ச்சல் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரா.நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் இரா.நல்லகண்ணு நேற்று இரவு சளி, காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்சியினர் மற்றும் நண்பர்கள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் பார்த்தும் நலம் விசாரிக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.