“தமிழ்நாட்டு வேலைகள், தமிழ்நாட்டு மக்களுக்கே” திருமாவளவன் தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்!!

தமிழ்நாட்டு வேலைகளை தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று நடைபெற்ற  வாசலிருப்பு ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அரியலூர் மாவட்டம் அங்கனூரில் அவரது வீட்டு வாசலில் நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரோடு விசிகவினரும் அங்கனூர் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், “தமிழக அரசு பணிகளை தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற இந்த கோரிக்கை ஒரு ஜனநாயக கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கை இனவாத கோரிக்கை அல்ல, பிற மொழி பேசும் மொழிவாத கோரிக்கை அல்ல என்பதை ஜனநாயக சக்திகள் மற்றும் பிற்போக்குவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த கோரிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இன-மொழி என்ற அடிப்படையில் இந்த கோரிக்கையை பார்க்காமல், மோடி அரசு அறிவித்துள்ள ஒரே நாடு – ஒரே தேர்வு இதனுடன் பொறுத்திப் பார்க்க வேண்டும். இந்தி தெரியாதவர்கள் இந்தியர்கள் அல்ல என்று அதிகாரிகளே சொல்லும் மிக மோசமான நிலை இங்கு உருவாகி இருக்கிறது. மோடி அரசின் இந்த ஆறு ஆண்டுகளில் பல துறையின் கோப்புகள் 80% இந்திமயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைத்து, ஒருமைத்துவத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் மோடி அரசு இறங்கி வருகிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மோடி அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப்பணிகள் வழங்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.உத்தரகாண்ட், மகராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இப்படி சட்டங்கள் உள்ளன. அண்மையில் பாஜக ஆளும் மத்தியபிரதேசத்திலும் அவ்வாறு சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது.

ஆனால், தமிழக அரசுப் பணிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும்போது அத்தகைய விதி எதுவும் இல்லை. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதி 21 இன்படி, தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் தெரியாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பிற மாநிலத்தவர்கள் இங்கே அரசுப்பணிகளில் நியமிக்கப்படுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது தமிழகத்தில் படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்களுக்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்வு என்ற திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணி நியமனங்களில் 90 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தமிழக அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்.” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x