ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு இந்தியா வந்தது எதனால்!!!சுரேஷ் ரெய்னா விளக்கம்…

நான் ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு இந்திய வந்ததற்கு முக்கியக் காரணம் இதை கவனிக்க மட்டுமே என உண்மையை போட்டு உடைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா.
ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இதற்காக இந்தியாவிலிருந்து இந்திய வீரர்கள் பலர் ஏற்கனவே துபாய் மற்றும் அபுதாபி சென்று தனிமைப்படுத்தி கொண்டனர். அதன்பிறகு தற்போது இயல்புநிலை பயிற்சிக்கும் திரும்பி இருக்கின்றனர்.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் பதிமூன்று பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை அணியில் இப்படி ஒரு சிக்கல் இருக்கும்பொழுது திடீரென இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள்வதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துவிட்டு இந்தியா திரும்பினார்.

சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பினார் என முதலில் கூறப்பட்டது. பின்னர் தோனிக்கு அளிக்கப்பட்ட அறையை போன்றே தனக்கு அளிக்கவில்லை என்ற கோபத்தினால் சென்னை அணியை விட்டு விலகி இருக்கிறார் ரெய்னா எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் உண்மையான காரணம் என்னவென்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். சுரேஷ் ரெய்னா வெளியிட்ட பதிவில்,
‘இன்று வரை எனது குடும்பத்தினர்களுக்கு நடந்த அந்த சம்பவத்தை யார் செய்தார் என்று தெரியவில்லை. எனது மாமா மருத்துவமனையில் இறந்து விட்டார். அத்தை மற்றும் அத்தை மகன்கள், அவர்களுடன் மேலும் ஒரு வயதானவர் என அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனது மாமாவின் மகன் நேற்று இந்த சம்பவத்தினால் உயிரிழந்திருக்கிறார்.

பஞ்சாப் காவல்துறை தற்போது வரை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை செய்த குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்வதை தடுக்க வேண்டும்.’ என குறிப்பிட்டிருந்தார்.