தமிழ்நாட்டு தபால்காரரின் சேவைக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கர்நாடக எம்.பி.,

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த தபால்காரர் கடந்த சில ஆண்டுகளாக அடர்ந்த வனப்பகுதி வழியாக 15 கி.மீ., நடந்து தபால் விநியோகித்தார். அவரது இந்த சேவையை பாராட்டி கர்நாடக எம்.பி., ரூ.1 லட்சம் வழங்கி கவுரவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் சிவன், (65) தபால்துறையில், 30 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், ஹில்குரோவ் தபால் நிலையத்தில், 10 ஆண்டுகள் கிராம தபால்காரராக இருந்தார். தினமும் 15 கி.மீ., வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்தே சென்று, தபால்கள், மணியார்டர், பதிவு தபால் பட்டுவாடா செய்தார். கடந்த, மார்ச், 7ல் ஓய்வு பெற்றார்.
இவரது சேவை குறித்து, செய்தி வெளியானது. இதை ‘இன்கோ சர்வ்’ மேலாண்மை இயக்குனர் சுப்ரியா சாஹூ, சிவனுக்கு பாராட்டு தெரிவித்து, தனது ‘டுவிட்டரில்’ பதிவிட்டார். இதை படித்த, கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி., ராஜிவ் சந்திரசேகர் (பா.ஜ.,) ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி கவுரவிப்பதாக அறிவித்தார். சிவனின், வங்கி கணக்கு எண்ணில், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். தன்னை கவுரவித்த எம்.பி.க்கு, சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.