இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிலைக்கு அவமரியாதை செய்த ஒய்.எஸ்.ஆர். கங்கிரஸ்!

ஆந்திராவில் இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிலையை மறைத்து ஒய்.எஸ்.ஆர். கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பேனர் வைத்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் என்ற பகுதியில் பிறந்த அப்துல் கலாம், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார். மேலும், நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியையும் அலங்கரித்தார்.
அப்துல் கலாமுக்கு மரியாதை செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் தர்மாவரத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டு, கலாம் பிறந்த நாள், நினைவு நாளின் போது மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், கலாமின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலையை சுத்தம் செய்ய சென்ற சமுக ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம், கலாம் சிலையை மறைத்து, அந்த தொகுதியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கதிர்ரெட்டியின் ஆதரவாளர்கள் மிக உயரமான பேனர் வைத்திருந்தனர். இதனால், கலாம் சிலையை சுத்தம் செய்ய முடியாமல் சமூக ஆர்வலர்கள் திரும்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு தெலுங்கு சேதம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கலாம் சிலைக்கு நேர்ந்த அவமரியாதை அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களிடம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.