நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நீட் தேர்வும் ஜேஇஇ தேர்வும் திட்டமிட்டபடி நடைபெறும் தேசிய தேர்வு முகமை தெரிவித்து விட்டது.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரையில் சென்ற நிலையிலும், மாணவர்களுக்கு சாதகமாக எந்த முடிவும் வழங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பீதியில் மாணவர்கள் எப்படி தேர்வுகளை எதிர்கொள்ள போகிறார்கள் என கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் ஆண்டிபாளையம் முதல் மோடூர்பாளையம் வரை 1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலையை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை உள்ளிட்ட திட்டப்பணிகளை செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை. அரசு பள்ளிகளில் நடப்பு ஆண்டு அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும். 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், எத்தனை பேர் விண்ணப்பிக்கிறார்களோ அதனை பொறுத்தே அவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.” எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.