முக்கிய ஆவணங்களை அழிக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக கூறி 2வது நாளாக கேரளாவில் பாஜக தொடர் போராட்டம்!!

கேரளா தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை மாநில அரசு அழிக்க முயலுவதாக குற்றம்சாட்டி இரண்டாவது நாளாக இன்றும் கேரள தலைமைச் செயலகம் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
கேரளாவில் சமீபத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் தலைமையிலான அரசைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் கேரளா தலைமை செயலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் தீயில் நாசமாகின. ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே தீ விபத்து நாடகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் மற்றம் பாஜகவினர் நேற்று தலைமைச் செயலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.அப்போது திடீரென பாஜகவினர் சிலர் தலைமைச் செயலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர்.
இரண்டாவது நாளாக இன்றும் கேரள தலைமைச் செயலகம் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். தங்க கடத்தல் வழக்கு ஆவணங்களை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் கேரள அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து தண்ணீரை பீய்ச்சியடித்து போலீஸார் விரட்டியடித்தனர்.