“ஓ.டி.டி-க்கு எதிரான பிரச்சனையை சூர்யாவுக்கு எதிரான அரசியலாக மாற்றுகிறார்கள்!” பாரதிராஜா வேதனை!

ஓ.டி.டி – க்கு எதிரான பிரச்சனை சூர்யா என்ற தனி நபருக்கு எதிரான பிரச்சனையாக திசை திருப்பிவிட்டுள்ளது என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார். இது குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரைத்துறை நலிந்து கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும். உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் வாழ வழி செய்ய வேண்டும். பிரச்சனைகளை வேறுபக்கம் திசை திருப்புவது சரியாக தோன்றவில்லை . ஓ.டி.டி.-க்கு எதிரான பிரச்சனையை சூர்யாவுக்கு எதிரான பிரச்சனையாக திசை திருப்பிவிடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
“இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் அனைவரும் அறிந்ததே. எனவே சூர்யா மட்டுமல்ல எந்தவொரு இளைஞரையும் காயப்படுத்தாதீர்கள், மனம் வலிக்கிறது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாற்றுவழி தான் ஓ.டி.டி. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில், இதுபோன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப்போக்கில் அந்த இடத்திற்கு தள்ளப்படுவோம். சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் ஓ.டி.டி. வழியில் வரக்கூடாது என்பவர்கள் முடக்கப்பட்டுள்ள பல சிறிய பட்ஜெட் படங்களை திரையில் கொண்டு வர முன்வருவார்களா? என்று இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் காண ஓ.டி.டி. சிறந்த தளமாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில் சூர்யா எடுத்துள்ள முடிவு வரவேற்கக்கூடியது.” இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்,