மூடியிருந்த அரசுப் பள்ளியில் ஆயுதங்களுடன் தங்கியிருந்த நபரை தேடும் தனிப்படை போலீஸார்!!

கூடலூர் அருகே அரசுப் பள்ளியில் ஆயுதங்களுடன் தங்கியிருந்த நபர் நக்ஸலா என்ற சந்தேகத்தின் பேரில், போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புளியம்பாறையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உதவியாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அவ்வப்போது பள்ளிக்கு சென்று வந்துள்ளனர். நேற்று மாலை உதவியாளர் மோகன் சென்றபோது, பள்ளியின் முன்புற கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வகுப்பறையிலிருந்து மர்ம நபர் வெளியே ஓடியுள்ளார். உடனடியாக மோகன் தனது மொபைல் போனால் அவரை படம் பிடித்துள்ளார். அப்போது கைகளை கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு, அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.

பின்னர் அறையினுள் சென்று பார்த்தபோது கூர்மையான ஆயுதங்கள், ஹெல்மெட், பெட்ரோல் கேன் மற்றும் பழக்கூடை ஆகியவை இருந்துள்ளன. வெளியில் இருசக்கர வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர் மற்றும் காவல்துறைக்கு மோகன் தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பொருட்களை கைப்பற்றிவிசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தப்பிய நபர் நக்ஸலா, வேட்டைக்காரனா அல்லது கொள்ளையனா என தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தப்பியோடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.