சுஷாந்த் சிங் மரணம்: ரியா, அவரது சகோதரரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், பாலிவுட் நடிகை ரியா சக்கரபர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்கரபர்த்தியிடம் 18 மணி நேரத்திற்கும் மேல் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக, மும்பை மற்றும் பாட்னா போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என பீகார் அரசு வலியுறுத்தும் நிலையில், அதற்கு மஹாராஷ்டிர அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரபர்த்தியிடம் அண்மையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதே நாளில், ரியா சக்கரபர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்கரபர்த்தியிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கிடுக்கப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் தொடர்ந்து 18 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது, சுஷாந்த் சிங் உடனான தொடர்பு, வியாபாரம், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவை குறித்து ஷோயிக் சக்கரபர்த்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நாளை மீண்டும் நேரில் ஆஜராகும்படி, ரியா சக்கரபர்த்தி மற்றும் அவரது தந்தை இந்திரஜித் சக்கரபர்த்திக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.