‘16 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம்’- வீடியோ வெளியிட்ட சச்சின் பைலட்

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள சச்சின் பைலட் தனது முகாமில் உள்ள ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தனக்கு முதல்வர் பதவி தராததால், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், காங்கிரஸூக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி தூக்கியுள்ளார். தனக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், அதன் மூலம் தற்போதைய முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் 15 எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்துள்ளனர். முதலில் சச்சின் பைலட்டிற்கு 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பபதாக கருதப்பட்ட நிலையில், இந்த வீடியோ வெளிவந்துள்ளது.
நேற்று காலை முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஜெய்ப்பூரில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 12 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்வில்லை. இதனால், இந்த சந்திப்புக்கு பின்னர் கெலாட்டுக்கு 106 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பா.ஜ.க வின் 1.5 கோடி ரூபாய் குதிரை பேரத்தை தவிர்க்கும் விதமாக, விடுதியில், எம்.எல்.ஏ.க்களை பத்திரமாக காங்கிரஸ் தரப்பினர் தங்கவைத்துள்ளனர்.