“ஸ்வீடன் நாட்டவர் ஏன் இந்திய மாணவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்?” மத்திய கல்வி அமைச்சர் கேள்வி!!
![](https://thambattam.com/storage/2020/08/asdfads-780x470.jpg)
JEE, NEET தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க்கிற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் JEE முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையிலும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு அரசியல் கட்சியினர் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்வீடனை சேர்ந்த, காலநிலை மாற்றம் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க் JEE மற்றும் NEET தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். இதனிடையே, அவர் இந்தியாவில் நடத்தப்படும் தேர்வுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
![](https://thambattam.com/storage/2020/08/sadasf-300x117.jpg)
‘கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மாணவர்களை தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு கூறுவது நியாயமற்றது என்றும், மில்லியன்கணக்கான மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் கிரெட்டா தன்பர்க்கின் கருத்தில் பதிலளிக்கப்படாத பல கேள்விகள் எழுந்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அவர் ஒரு ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர். அவர் இந்திய JEE மற்றும் NEET தேர்வுகள் தொடர்பாக ஏன் கருத்து தெரிவித்தார் என்பதை அறிய விரும்புகிறேன். மற்ற நாடுகளில் உள்ள மாணவர்களுக்காகவும் அவர் இதே போல் குரல் கொடுத்தாரா? இந்திய மதிப்பீட்டு முறையின் முக்கியத்துவம் பற்றி அவருக்கு தெரியுமா? இந்திய கல்வி முறையை பற்றிய அவரது அணுகுமுறையில், பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன.” என்று கூறியுள்ளார்.