அமெரிக்க அரசியல் நெருக்கடி காரணமாக டிக்டாக் செயலி சி.இ.ஓ திடீர் ராஜினாமா!!
டிக்டாக் செயலியின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து கெவின் மேயர், ராஜினாமா செய்துள்ளதாக சீன நிறுவனமான பைட் டான்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தேச பாதுகாப்பு கருதி, டிக்டாக் நிறுவனம், பைட் டான்சுடன் எந்தவொரு தகவலையும் பகிர கூடாதென டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கடந்த 7ம் தேதி கையெழுத்திட்டார். இந்த உத்தரவு வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. மேலும் டிக்டாக் நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க கெடு விதித்து, அதிரடி உத்தரவும் பிறப்பித்தார்.
இந்த நிலையில், டிக்டாக் நிறுவன சி.இ.ஓ கெவின் மேயர் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘அரசியல் சூழ்நிலை மாறி இருப்பதால் டிக்டாக் நிறுவனத்தில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கனத்த இதயத்துடன் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். டிக்டாக் பொது மேலாளர் வனேசா பப்பாஸ், கெவின் மேயருக்கு பதிலாக இடைக்கால சி.இ.ஓ.,வாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் கெவின் மேயர், சீனாவை தலையிடமாக கொண்ட பைட் டான்ஸில் நிறுவனத்தின் டிக்டாக் செயலியின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அதற்கு முன்னதாக டிஸ்னி நிறுவனத்தின் நீண்ட காலமாக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். டிஸ்னி நிறுவனத்தில் நுகர்வோர் சேவை மற்றும் சர்வதேச வர்த்தக பிரிவின் தலைவராக பணியாற்றியவர் என டிக்டாக் நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.